பழைய வீடுகளை இடித்து விட்டு  புதிய வீடுகளை கட்டித்தர வேண்டும்

பழைய வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகளை கட்டித்தர வேண்டும்

தமிழக சட்டசபையில் கடந்த 21.3.2018 அன்று எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். ரவிச்சந்திரன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது:-

எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 61-வது வார்டில் டாக்டர் சந்தோஷ் நகர் குடியிருப்பு, 77-வது வார்டில் பி.கே. காலனி குடியிருப்பு, 104-வது வார்டில் கரும்புத் தோட்டக் குடியிருப்பு, ஆர்.கே. புரம் குடியிருப்பு, ஓசான்குளம் குடியிருப்பு மற்றும் 107-வது வார்டில் எம்.எஸ். நகர் குடியிருப்பு ஆகிய குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்புகள் ஏறக்குறைய 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, அவை சரியான முறையில் பராமரிக்கப்பட முடியாத நிலையில், அங்கே வாழக்கூடிய மக்கள் ஓர் அவலமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

சமீபத்தில்கூட அந்தத் துறையின் குடிசை மாற்று வாரியத்தின் அதிகாரிகளை நேரடியாக அந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று, ஆய்வு செய்தபொழுது, “இந்த மக்கள் எப்படி இங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்?” என்று அந்தத் துறையின் அதிகாரிகளே மனம் நொந்தபடிதான் சென்றார்கள். ஆகவே, இந்தத் துறையின் பொறுப்பை ஏற்றிருக்கக்கூடிய துணை முதலமைச்சர், நான் தெரிவித்திருக்கிற அந்தப் பகுதிகளையெல்லாம் உடனடியாக ஆய்வு செய்து, அந்த இடங்களிலுள்ள பழைய குடியிருப்புகளை உடனடியாக இடித்துவிட்டு புதிய குடியிருப்புகளைக் கட்டித் தர வேண்டும்.

அதேபோல் 104-வது வார்டில் திடீர் நகர் என்ற குடியிருப்பு உள்ளது. ஏறக்குறைய 500 வீடுகள் உள்ள அந்தக் குடியிருப்பில், கடந்த காலத்தில் தீ விபத்து ஏற்பட்டபோது, தி.மு.க. ஆட்சியின் போது துணை முதலமைச்சராக இருந்த எங்கள் கழகத்தின் செயல் தலைவர் அந்தக் குடிசை வீடுகளுக்குப் பதிலாக கல்நார் வேய்ந்த வீடுகளைக் கட்டிக்கொடுத்தார்கள். ஆனால், தற்போது அந்தக் கல்நார் வேய்ந்த வீடுகள் எல்லாம் இடிந்து, அங்கு வாழக்கூடிய மக்கள் பேனர்களையும், தார்ப்பாலின்களையும் வீட்டின் கூரைகளாக அமைத்து எந்த அடிப்படை சுகாதார வசதியுமின்றி வாழக்கூடிய ஓர் அவல நிலை இருக்கிறது.

அந்தத் திடீர் நகரின் பின் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமாக இடம் காலியாக எந்தப் பயன்பாடுமின்றி இருக்கின்றது. அந்தத் துறையின் அமைச்சர் அவர்களைத் தொடர்புகொண்டு, அதை உடனடியாக வகை மாற்றம் செய்து, திடீர் நகரில் குடிசைகளில் வசிக்கக்கூடிய மக்களுக்கு அந்த இடத்தில் உடனடியாக அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டித் தர இந்த அரசைக் கேட்டுக்கொள்கின்றேன்.

தற்பொழுது பி.கே. காலனியில் கே.பி. பார்க் என்ற இடத்தில் 1,500-க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டத் துவங்கியிருக்கிறார்கள். அந்த வேலை நடைபெறும் இடங்களில், அங்கு பயன்படுத்தக்கூடிய பொருட்களின் தரங்களைக் கண்காணிக்கக்கூடிய வகையில் அரசின் சார்பாக, அந்தத் துறையின் சார்பாக 2 அதிகாரிகளை நியமிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன். எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து குடிசை மாற்று வாரிய வீடுகளையும், 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அனைத்து வீடுகளையும் இடித்துவிட்டு, புதிய குடியிருப்புகளை இந்த அரசு போர்க்கால அடிப்படையில் கட்டித் தர வேண்டும் என்று அரசின் கவனத்தை ஈர்க்கிறேன்.இவ்வாறு எம்.எல்.ஏ. கே.எஸ். ரவிச்சந்திரன் பேசினார்.

இதற்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசியதாவது:-

டாக்டர் சந்தோஷ் நகர் திட்டப் பகுதியில் 272 குடியிருப்புகள் 1972-1975 ஆம் ஆண்டில் கட்டப்பட்டன. இத்திட்டப் பகுதியில் 2012-2017 ஆம் ஆண்டு வரை சுமார் 27.77 இலட்சம் ரூபாய் செலவில் பழுதுபார்க்கும் பணிகளும், 2016-2017 ஆம் ஆண்டில் 7.23 லட்சம் ரூபாய் செலவில் சுவருக்கு வர்ணம் பூசும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும், பராமரிப்புப் பணிகள் முறையாகச் செய்யப்பட்டும் வந்திருக்கின்றன. இத்திட்டப் பகுதியை 13-3-2018 அன்று தலைமைப் பொறியாளர், மேற்பார்வைப் பொறியாளர், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் மற்றும் எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில், இக்கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட அறிவுறுத்தப்பட்டது. தொழில்நுட்பக் குழு ஆய்வு மேற்கொண்டு ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் மறுகட்டுமானம் செய்ய உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஓசான்குளம் திட்டப் பகுதியில் 288 குடியிருப்புகள் 1976-1977 ஆம் ஆண்டு கட்டப்பட்டன. இத்திட்டப் பகுதியில் 2012-2017 ஆம் ஆண்டு வரையிலும் சுமார் ரூ.26.37 லட்சம் செலவில் பழுதுபார்க்கும் பணிகளும், 2016-2017 ஆம் ஆண்டில் ரூ.6.28 லட்சம் செலவில் சுவருக்கு வர்ணம் பூசும் பணிகளும்மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், பராமரிப்புப் பணிகள் முறையாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டப்பகுதியின் குடியிருப்புகள் தாழ்வான இடத்தில் அமைந்துள்ளதால், மழைக் காலங்களில் இக்குடியிருப்புகளைச் சுற்றிலும் தண்ணீர் தேங்குவதால் அடிக்கடி பழுதும் ஏற்படுகிறது. தொழில்நுட்பக் குழு விரைவில் ஆய்வு செய்ய உள்ளது.

அடிப்படையில் தக்க முடிவு எடுக்கப்படும் என்பதனையும் நான் இங்கு தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். பெருநகர சென்னை மாநகராட்சிக் கோட்டம் எண் 77-ல் அமைந்துள்ள 594 குடியிருப்புகள் பி.கே. காலனி பகுதியில் கட்டப்பட்டுள்ளன. இவற்றுள் கட்டடத் தொகுதி 3 மற்றும் 4-ல் உள்ள 64 குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்துள்ளதால், அவற்றை இடித்துவிட்டு புதிதாகக் கட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு பரிந்துரையும் செய்துள்ளது. மேற்குறிப்பிட்ட இரண்டு கட்டடத் தொகுதிகளையும் இடித்துவிட்டு, குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.