சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில்   கூடுதல் மகிளா நிதிமன்றங்களை அமைக்க வேண்டும்  ரவிச்சந்திரன் எம்.எல்.ஏ. கோரிக்கை

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மகிளா நிதிமன்றங்களை அமைக்க வேண்டும் ரவிச்சந்திரன் எம்.எல்.ஏ. கோரிக்கை

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மகிளா நிதிமன்றங்களை அமைக்க வேண்டும் ரவிச்ந்திரன் எம்.எல்.ஏ. கோரிக்கை தமிழக சட்டபையில் கடந்த 2-8-2016- அன்று நடந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் பங்கேற்று பேசியதாவது:-

சென்னை உயர் நீதிமன்றத்தின் முதலாவது அமர்வு ஒரு வழக்கில் தமிழகத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பொதுப் பணித் துறையின்மூலம் ஜெனரேட்டர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும், அதே வழக்கில் அனைத்து நீதிமன்றங்களிலும், சிறைச்சாலைகளிலும் சி.சி.டி.வி. கேமராவை பொருத்தித் தர வேண்டும் என்றும், ஒரு வருட காலத்திற்குள் இந்த வசதிகளை தமிழக அரசு நிறைவேற்றித் தரவேண்டும் என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. அதன்படி, சி.சி.டி.வி. கேமராக்கள் அமைப்பது, ஜெனரேட்டர்கள் அமைப்பது தொடர்பான பணிகள் எந்த நிலையில் உள்ளன என்பதை தமிழக அரசிடமிருந்து அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

எழும்பூர் நீதிமன்றத்தில் பழைய நீதிமன்றக் கட்டடத்தை இடித்துவிட்டு தற்போது புதிய நீதிமன்றக் கட்டடம் தமிழக அரசால் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கெனவே எழும்பூர் நீதிமன்றக் கட்டடத்தில் ஒரு கழிவறையைச் சுத்தம் செய்ய வேண்டுமென்று சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறினால், மாநகராட்சி அதிகாரிகள் பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் கூறுங்கள் என்று சொல்வார்கள். பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் கூறினால், இந்த வேலை எங்களைச் சார்ந்தது இல்லை, ஆகவே, மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறுங்கள் என்று சொல்வார்கள்.

நான் அந்த நீதிமன்றத்தில் தொழில் செய்துகொண்டிருப்பவன் என்ற முறையில் இந்த நிலைமை எனக்குத் தெரியும். அந்த நிலைமை தற்போது புதியதாகக் கட்டப்பட்டுவரும் கட்டடத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் சொல்கிறேன்.

அதேபோல், அங்கே வேலை செய்யக்கூடிய அலுவலர்களுக்கு தனியாக கழிவறையும், வழக்கறிஞர்களுக்குத் தனியாக கழிவறையும் கட்டித் தர வேண்டும். ஏறக்குறைய 15 நீதிமன்றங்கள், எழும்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வரவிருப்பதால், ஒரு நாளைக்கு 1500, 2,000 பேர் வந்து போகக்கூடிய சூழ்நிலையில், அங்கே அனைவருக்கும் தனித் தனியாக கழிவறைகளைக் கட்டுவது மட்டுமல்லாமல், அந்த இடத்தை சுத்தம் செய்பவர்களை அரசே நியமித்து, சுத்தம் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்

அதேபோல், ஒருங்கிணைந்த எழும்பூர் நீதிமன்றத்தில் தபால் நிலையம், வங்கி, ஒரு சிறிய மருத்துவமனை ஆகியவற்றை தமிழக அரசால் அமைத்துத் தரப்படும்பட்சத்தில், வருகிற வழக்காடிகளாக இருந்தாலும் சரி, வழக்கறிஞர்களாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் எந்தவித சிரமமும் இல்லாமல் அவர்களுடைய பணிகள் சிறப்பாக நடைபெறும். ஆக, அதையும் தமிழக அரசு நிறைவேற்றித் தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல், எழும்பூர் தலைமை பெருநகர் குற்றவியல் நீதிமன்றம், நூறாண்டுகள் பழமை வாய்ந்தது. பலவிதமான வழக்குகள் அந்த நீதிமன்றத்தில் நடந்திருக்கின்றன. தமிழக அரசு பல்வேறு வழக்குகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களைச் சேகரித்து, அந்த நீதிமன்றக் கட்டடத்தை ஒரு கண்காட்சியகமாக மாற்றிக் கொடுத்தால், இளம் வழக்கறிஞர்களுக்கு ஏற்கெனவே நடந்த வழக்குகளைப் பற்றித் தெரிந்துக் கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும். அதையும் நிறைவேற்றித் தரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மகிளா கோர்ட் என்று சொல்லக்கூடிய பெண்களுக்கான நீதிமன்றம் ஒன்றுதான் உள்ளது. இந்த நீதிமன்றத்தில்தான் 18 வயதிற்குக் குறைவான பெண் குழந்தைகள் பாதிக்கப்பட்டால், அதற்கான வழக்கு நடைபெறுகிறது. 18 வயதிற்குக் குறைவான பெண் குழந்தைகள் பாதிக்கப்படும்போது, தனியாக ஒரு விசாரணை நீதிமன்றம் அமைத்து, அவர்களை விசாரித்தால் நன்றாக இருக்கும். அதேபோல், இன்னும் 2, 3 மகிளா கோர்ட்டுகளை அமைத்துக் கொடுத்தால், நன்றாக இருக்கும். இவ்வாறு ரவிச்சந்திரன் பேசினார்.

Leave a comment