இந்தி மொழி திணிப்பை அனைவரும் ஒன்றுப்பட்டு தடுப்போம்

இந்தி மொழி திணிப்பை அனைவரும் ஒன்றுப்பட்டு தடுப்போம்

சட்டசபையில் எம்.எல்.ஏ. கே.எஸ். ரவிச்சந்திரன் கோரிக்கை தமிழக சட்டமன்றத்தில் நடந்த மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். ரவிச்சந்திரன் பங்கேற்று பேசியதாவது:-

தமிழகத்திலேயிருந்து, இதே 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்திலே இருந்திருப்போமேயானால், கண்டிப்பாக நீட் என்னும் கொடிய அரக்கத் தேர்வை வரவிட்டிருக்க மாட்டோம் என்பதை இந்த நேரத்திலே நான் இங்கே பதிய வைக்கக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

அமைச்சர் ஓ.எஸ். மணியன்:- நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தபோது அல்ல, கேபினட் அமைச்சர்களாக இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது.

கே.எஸ். இரவிச்சந்திரன்:- தமிழர்களும், தமிழும் வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்படுவதை முற்றிலும் தடுத்திட வேண்டும். ஐம்பெரும் காப்பியங்களும், பத்துப்பாட்டும், எட்டுத் தொகையும், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் நம் உயிரனைய தமிழுக்குக் கிடைத்த மிகச் சிறந்த கோகினூர் வைரங்களாகும். அத்தகைய விலைமதிப்பற்ற தமிழ் ஆபரணங்களை வருங்கால தலைமுறையினர் ஆர்வமுடன் அறிந்து, தெரிந்துகொள்ளும் வகையில் முத்தமிழ் அறிஞர், கலைஞர் கழக ஆட்சியில், சென்னையில் வள்ளுவர் கோட்டத்தையும், குமரிக் கடலில் வானுயர வள்ளுவருக்கு சிலையும் வடித்து, தமிழரின் ஓங்குபுகழை உலகறியச் செய்தார்கள். பூம்புகார் எழில்நிலை மாடத்தை அமைத்து, இளங்கோவடிகள் தந்த சிலப்பதிகாரத்தின் பெருமையை, கற்புக்கரசி கண்ணகியின் மாண்பை, இந்தத் தலைமுறையினர் உணரச் செய்தார். நீங்கள் கண்டிப்பாக அந்தப் பூம்புகாரைப் பராமரிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்.

150 ஆண்டுக் கால தமிழ் அறிஞர்களின், தமிழ்ச் சான்றோர்களின் செம்மொழிக் கோரிக்கைப் போராட்டங்களைத் தன்னுடைய அரசியல் அதிகாரத்தின் மூலமாக முற்றுப்புள்ளி வைத்து, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன அலுவலகத்தை மைசூரிலிருந்து சென்னைக்கு இடம்பெறச் செய்தவர் தலைவர் கலைஞர். ஆனால், இன்றைக்கு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அதன் குறிக்கோளை, இலட்சியத்தை நோக்கிச் செல்லாமல் முடக்கப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறை குறித்துப் பேசும்போது செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் எத்தகைய பரிதாப சூழலில் உள்ளது என்பதை எண்ணிப் பார்த்திட வேண்டும்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களை அலட்சியப்படுத்தியதாக நான் கருதவில்லை. சோழ நாட்டில் பிறந்து, பாண்டிய நாட்டில் தஞ்சமடைந்து, பின்னர் சேர நாட்டில் தன் வாழ்வை முடித்துக்கொண்ட கற்புக்கரசி கண்ணகியின் வரலாற்றையும், அதை உலகுக்குக் கூறிய இளங்கோவடிகளையும் அலட்சியப்படுத்துகிறீர்கள், அவமதிக்கிறீர்கள்.

2021 -ம் ஆண்டிற்குள் பழந்தமிழரின் வீரம், காதல், சுற்றுச்சூழல், வணிகம், போர், நீர் மேலாண்மை, வேளாண்மை, வாழ்வியல் நெறிகளையும், சிந்தனைகளையும்எடுத்துரைத்து, தமிழ்ச் சமூகத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் பழந்தமிழர் பண்பாட்டுக் காட்சியகத்தை ரூபாய் 50 கோடியில் அமைப்பதாக அறிவித்துவிட்டீர்கள். ஆனால், தற்போது மத்திய அரசு இந்தித் திணிப்பை அனைத்துத் துறைகளிலும் செய்கிறது. அதைத் தடுக்கும் வகையில் நாம் அனைவரும்ஒன்று சேர்ந்து மத்திய அரசைத் தடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறு சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். ரவிச்சந்திரன் பேசினார்.