எழும்பூர் பகுதி சலவைத் தொழிலார்களின் வாழ்வை பாதுகாக்க வேண்டும்

எழும்பூர் பகுதி சலவைத் தொழிலார்களின் வாழ்வை பாதுகாக்க வேண்டும்

சட்டசபையில் ரவிச்சந்திரன் கோரிக்கை

தமிழக சட்டபையில் கடந்த 2-8-2016- அன்று நடந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் பங்கேற்று பேசியதாவது:-

மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சலவைத் தொழிலாளர்களுக்கென்று 20 ஓய்வறைகளும், ஓர் இஸ்திரிக் கூடமும் கட்டி முடிக்கப்பட்டன. அவற்றை உடனடியாகத் திறப்பதற்கு அரசு ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.

ஏனென்றால், கட்டிமுடிக்கப்பட்டு இரண்டாண்டுகள் ஆகியும் அந்தக் கட்டடம் பூட்டியே இருக்கின்றது. அங்குள்ள சலவைத் தொழிலாளர்கள் மிகுந்த மன வேதனையுடன் இருப்பதற்கு இடமில்லாமல் இருக்கிறார்கள். உடனடியாக அதற்கான முயற்சிகளை இந்த அரசு செய்ய வேண்டுமென்று அதேபோல், அப்பகுதியிலுள்ள சலவைத் தொழிலாளர்களுக்கு, இரண்டு சலவைத் தொழிலாளர் கூடங்கள் இருக்கின்றன. சேத்துப்பட்டிலுள்ள சலவைத் தொழிலாளர்களுக்கு மின்சார வசதி செய்து தர வேண்டும். அங்கு 25 முதல் 50 சலவைத் தொழிலாளர் குடும்பங்கள் இருக்கின்றன.

ஆனால், ஒரே ஒரு மீட்டர் பொருத்தி, அவர்கள் அனைவரிடமும் பணம் வசூல் செய்கிறார்கள். அங்கே 50 துணி துவைப்பவர்களும் இருக்கிறார்கள். 500 துணி துவைப்பவர்களும் இருக்கின்றார்கள். அவர்களுக்குள் மின் கட்டணத்தை பண்ணும்போது பிரச்சினை ஏற்படுகிறது. நீங்கள் 500 ரூபாய் கொடுங்கள், நீங்கள் 500 ரூபாய் கொடுங்கள் என்று எல்லோரிடமும் ஒரே கட்டணத்தை கேட்கும்போது, சிலர் கொடுக்காததால் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் இரண்டு இடங்களில், ஒரு இடத்தில் ஒன்பது லட்சம் ரூபாயும், மற்றொரு இடத்தில் ஐந்தரை லட்சம் ரூபாயும் வேறுபாடு இருக்கிறது.

அந்த ரூபாய் ஒன்பது லட்சத்தையும், ரூபாய் ஐந்தரை லட்சத்தையும் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கின்றது. சலவைத் தொழிலாளர்கள் மிகுந்த மன வேதனையில் இருக்கிறார்கள். இந்த அரசானது அவர்களுக்கு உடனடியாக தனித் தனியாக மின்சார மீட்டர் பொருத்தி, அவர்களிடம் மின் கட்டணத்தை வசூல் செய்தால், அவர்களால் கட்ட முடியும். இன்றைக்கு எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து வந்து, என்னிடம் முறையிட்டு, அரசாங்கத்தை நீங்கள் வற்புறுத்த வேண்டும் என்று சொன்னார்கள். அவர்கள் கட்ட வேண்டிய மின் கட்டணத்தை ரத்து செய்து, சலவைத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும் . இவ்வாறு ரவிசந்திரன் பேசினார்.