கங்காதீஸ்வரர் கோயில் தெருவில் உள்ள  குடிசை மாற்று வீடுகளை இடித்து விட்டு  புதிய வீடுகளை கட்டித்தர வேண்டும்  எழும்பூர் எம்.எல்.ஏ. கே.எஸ். ரவிச்சந்திரன் கோரிக்கை

கங்காதீஸ்வரர் கோயில் தெருவில் உள்ள குடிசை மாற்று வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகளை கட்டித்தர வேண்டும் எழும்பூர் எம்.எல்.ஏ. கே.எஸ். ரவிச்சந்திரன் கோரிக்கை

தமிழக சட்டசபையில் கடந்த 13.6.18 அன்று சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். ரவிச்சந்திரன் “எழும்பூர் சட்டமன்றத் தொகுதியிலுள்ள 104–வது வார்டிலுள்ள, கங்காதீஸ்வரர் கோயில் தெருவில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகள் 1975 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டவை. அந்தக் குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகள் கட்ட வேண்டியதன் அவசியம்” குறித்த அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினை துணை முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்’ என்றார். அப்போது பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘ விவர அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.’ என்றார்.

தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். ரவிச்சந்திரன் பேசியதாவது:-
விவர அறிக்கையை படித்துப் பார்த்தேன். எழும்பூர் தொகுதி, 104–வது வட்டம், கங்காதீஸ்வரர் கோயில் தெருவில் 56 வீடுகள் கொண்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கடந்த 1975 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதேபோல், 168 வீடுகள் கொண்ட ஆர்.கே. புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு 1974 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதேபோல, 104–வது வட்டத்திலுள்ள ஓசோன்குளம் என்ற பகுதியில் 1970 ஆம் ஆண்டு 288 வீடுகள் கட்டப்பட்டன.

அதேபோல, 61–வது வட்டம், டாக்டர் சந்தோஷ் நகரில் 1975 ஆம் ஆண்டு 272 வீடுகள் கட்டப்பட்டன. அதேபோல, 77–வது வட்டம், பி.கே. காலனி பகுதியில் 1974 ஆம் ஆண்டு 594 வீடுகள் கட்டப்பட்டன. அதேபோல், எம்.எஸ். நகர் பகுதியில் 1972 ஆம் ஆண்டு 224 வீடுகள் கட்டப்பட்டன. வேம்புலி அம்மன்
கோவில் தெருவில் 1972 ஆம் ஆண்டு 144 வீடுகள் கட்டப்பட்டன.

இந்த வீடுகளெல்லாம் எங்களுடைய கழகத்தின் தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது கட்டி முடிக்கப்பட்டன. விவர அறிக்கையிலே துணை முதலமைச்சர் அந்த வீடுகளுக்குப் பல்வேறு பணிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிவித்திருக்கின்றார்.

அந்த விவர அறிக்கையிலே சொல்லப்பட்டதெல்லாம் மேல்பூச்சுதான். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்று சொன்னால், னீணீளீமீ–uஜீ போட்டு வைக்கப்பட்டு இருக்கின்றது. ஒரு மழை பெய்தால் உடனே கலைந்துவிடும். மேலே மழை பெய்தால் அந்த மழை நீர் உட்பகுதிக்கு வந்து அது தரை தளத்திற்கு வருகிறது. 4 மாடிகள் கொண்ட அந்த கங்காதீஸ்வரர் கோவில் தெருவிலுள்ள வீடுகளில், நான்காவது மாடியில் மழை பெய்தால் தரைத் தளத்திற்கு தண்ணீர் வரக்கூடிய சூழ்நிலை இருந்துகொண்டிருக்கிறது. அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்து, வெளிப்புறத்தைப் பார்த்துவிட்டு சுண்ணாம்பு அடித்துவிட்டு, அந்த வீடுகள் நன்றாக இருக்கின்றன என்று அறிவித்திருக்கின்றார்கள்.

ஆகவே, உடனடியாக நான் மேலே குறிப்பிட்ட எங்களுடைய கழகத் தலைவர் கலைஞர் ஆட்சியில் இருந்தபோது கட்டப்பட்ட அந்த வீடுகளை உடனடியாக இடித்துவிட்டு, புதிய வீடுகளைக் கட்டித் தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அதேபோல 61–வது வட்டத்திலுள்ள சந்தோஷ் நகர் பகுதியில் 1975 ஆம் ஆண்டு 272 வீடுகள் கட்டப்பட்டன. அந்த வீடுகளில் உள்ளவர்களின் குழந்தைகளுக்கு திருமணம் செய்து, ஏறக்குறைய 317 குடும்பங்கள் காலியாக இருக்கின்ற இடங்களில் சந்தோஷ் நகர் குடிசை மாற்று வாரிய பகுதிகளின் அருகிலேயே குடிசைகளில் குடியிருந்து வருகிறார்கள். சந்தோஷ் நகர் குடியிருப்பை இடித்துவிட்டு புதிய குடியிருப்பு கட்டப்படும்பொழுது, குடிசைப் பகுதிகளில் இருக்கக்கூடிய அந்த குடிசைவாசிகளுக்கும் அதே இடத்தில் வீடுகள் கட்டித்தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ரவிச்சந்திரன் பேசினார்.

அதற்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசியதாவது:- சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 104–வது வார்டில் உள்ள கங்காதீஸ்வரர் கோயில் தெரு திட்டப் பகுதியைப் பொறுத்தமட்டில், விவர அறிக்கையில் குறிப்பிட்டபடி, 56 அடுக்குமாடி குடியிருப்புகள், இரண்டு தொகுப்புகளாக, 4 அடுக்கு மேம்பாட்டில், குடியிருப்பு ஒவ்வொன்றும் 326 சதுர அடி கட்டுமானப் பரப்பில், 1974 ஆம் ஆண்டில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தால் கட்டப்பட்டன. மேலும், இக்குடியிருப்புகளில் 2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் ரூ.4.33 லட்சம் செலவில் அனைத்து பழுது பார்க்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, தற்போது நல்ல நிலையில் உள்ளன.

மேலும், 2016–2017 ஆம் ஆண்டில் ரூ.1.5 இலட்சம் செலவில் சுவருக்கு வர்ணம் பூசுவது உள்பட பல்வேறு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குடிசைப் பகுதிமாற்று வாரியத்தைப் பொறுத்தவரையில், பல ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட வீடுகளெல்லாம் உறுதித்தன்மை வாய்ந்த வீடுகளாக இன்று இருக்கின்றனவா, இல்லையா என்பதைக் கண்டறிய வாரியத்தின் மூலமாக பொறியாளர்கள் உள்ளடங்கிய தொழில்நுட்பக் குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. மேற்படி குடியிருப்புகளின் கட்டமைப்புகள் 13–3–2018 அன்று பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு, அவை உறுதியான தன்மையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர் குழுவினரோடு சென்று பார்த்திருக்கிறார்; அப்போது திருப்தியையும் தெரிவித்திருக்கிறார் என்ற நிலை இப்பொழுது இருக்கின்றது. எனவே, சென்னை, எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 104–வது வார்டில் உள்ள கங்காதீஸ்வரர் கோயில் தெருவில் அமைந்துள்ள குடிசைப் பகுதி மாற்று வாரியக் குடியிருப்புகளை தற்போது இடித்துவிட்டு மீண்டும் புதிய குடியிருப்புகள் கட்ட வேண்டிய அவசியம் எழவில்லை என ஆய்வறிக்கையில் தரப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், உறுப்பினர், இங்கு பல்வேறு பகுதிகள் அவருடைய சட்டமன்றத் தொகுதியில் உள்ளடங்கியுள்ளதாகச் சொல்லியிருக்கின்றார். குறிப்பாக எம்.எஸ். நகர் பகுதி. 224 வீடுகளைக் கொண்ட இந்தக் குடியிருப்பு 1971–1973 காலக்கட்டத்தில் கட்டப்பட்டது. 224 வீடுகளையும் தற்போது இடித்துவிட்டு, மறு கட்டுமானம் செய்யப்பட உள்ள பட்டியலில் அந்தக் குடியிருப்பு இருக்கிறது.

மறு கட்டுமானம் செய்யப்படுகின்றபொழுது, 500 வீடுகளாக அது கட்டப்பட உள்ளது. கூடுதலாக 276 வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இன்னொன்று, சந்தோஷ் நகர் என்ற குடியிருப்புப் பகுதியைப் பற்றியும் உறுப்பினர் சொன்னார். 272 வீடுகள் கொண்ட இந்தக் குடியிருப்பு 1972–1975 காலகட்டத்தில் கட்டப்பட்டது. அந்தப் பகுதியில் 607 வீடுகளாகக் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடுதலாக 335 வீடுகள் அமைப்பதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. உறுப்பினர் சொன்னதுபோல, பக்கத்திலேயே குடிசைகளில் இருக்கின்ற அந்த மக்களை, இந்த வீடுகள் கட்டி முடிக்கப்பட்டவுடன் மறு குடியமர்வு செய்கின்ற பணி நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதோடு மட்டுமல்லாமல், இன்றும் 4, 5 இடங்களைப் பற்றி தன்னுடைய கேள்வியின் மூலமாக சொல்லியிருக்கிறார். அந்த இடங்களையும் தொழில்நுட்பக் குழு ஆய்வு செய்து, உள்ளபடியே குடியிருப்பதற்கு தகுதியற்ற நிலை இருந்தால், அவற்றையும் மறு குடியமைப்பு செய்வதற்கு ஏதுவாக புதிய வீடுகளாகக் கட்டித் தருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு துணை முதல்வர் பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.