எழும்பூர், சென்டரல் ரயில் நிலையங்களில்  வசதிகளை மேம்படுத்த வேண்டும்

எழும்பூர், சென்டரல் ரயில் நிலையங்களில் வசதிகளை மேம்படுத்த வேண்டும்

எழும்பூர், சென்டரல் ரயில் நிலையங்களில் வசதிகளை மேம்படுத்த வேண்டும் ரயில்வே அமைச்சரிடம் கே.எஸ்.ரவிச்சந்திரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

சென்னை, சென்டரல் ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பேசியதாவது:

எனது எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 77வது வார்டில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் சுமார் 3 ஏக்கர் நிலம் 25 வருடங்களாக பராமரிக்கப்படாமல் இருந்தது. எங்களது தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி அந்த இடத்தை சுத்தப்படுத்தி தர நடவடிக்கை எடுக்க கோரி தங்களிடம் 24.7.2016 அன்று மனு கொடுத்தேன். அதற்கு 20.9.2016 அன்று எனக்கு அனுப்பிய கடிதத்தில் கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கிறோம் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.

கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி முதல் மூன்று நாட்கள் அந்த இடத்தில் இருந்த மரம், செடிகளை அகற்றினார்கள். அதற்கு பிறகு மீதமுள்ள இடங்களை சுத்தப்படுத்தவில்லை இதுவரை. அப்படியே விட்டுவிட்டார்கள். இதனால், சிறிது மழை பெய்தாலும் அந்த இடம் சேறும்-சகதியுமாக மாறிவிடுகிறது. ஆடு, மாடு, பன்றிகள் மேய்கிறது. இதனால் அந்த இடம் அசுத்தப்படுகிறது. இதனால், அந்த இடத்தை சுற்றி வசிக்கும் மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமல்லாது தொற்று நோய் பரவிடவும் வழி வகுக்கிறது. ஆகவே, தாங்கள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து அந்த இடத்தை சுத்தப்படுத்தி தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த இடத்தில் உயர் கோபுர மின் விளக்கு பொருத்திய நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா, பொது கழிப்பிடம் ஆகியவற்றை அமைத்து கொடுத்தால் அந்த பகுதியை சுற்றியுள்ள ஏழை, எளிய மக்களின் குழந்தைகள், இளைஞர்கள் பயன்பெறுவர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புறநகர் செல்லும் நடை மேடை படிக்கட்டுக்கள் மிகவும் குறுகியதாக இருப்பதால் காலையிலும், மாலையிலும் பொதுமக்கள் அதிகளவில் வருவதால் படிக்கட்டில் தள்ளு, முள்ளு ஏற்படுகிறது. எனவே, அந்த நடைமேடைக்கு போகும் படிக்கட்டை அகலப்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை 1, 2, 3 மற்றும் 4 ஆகியவற்றில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் கழிப்பிட வசதி செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன். சென்னை சென்டரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மலிவு நிலையில் விற்க அந்தந்த இடத்திலுள்ள இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வாய்ப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கே.எஸ்.ரவிச்சந்திரன் எம்.எல்.ஏ.பேசினார்.

Leave a comment