எழும்பூர் சாஸ்திரி நகரில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்

எழும்பூர் சாஸ்திரி நகரில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்

சட்டமன்றத்தில் கே.எஸ்.இரவிச்சந்திரன் எம்.எல்.ஏ. கோரிக்கை

சட்டமன்றத்தில், எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன் கேள்வி நேரத்தின் போது கேள்வி ஒன்றை எழுப்பி தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து பேசியதாவது:

எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 104வது வார்டு சாஸ்திரி நகரிலுள்ள மக்களுக்கு 28.5.1988 அன்று 385 வீடுகள் அதையொட்டியுள்ள கொய்யா தோப்பை சேர்ந்த 25 குடிசை பகுதிகளுக்கும் வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. ஏறக்குறைய 350க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டது. எனவே, அப்பகுதி மக்களுக்கு அரசு உடனடியாக பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு கே.எஸ்.இரவிச்சந்திரன் கூறினார்.

இதற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலளித்து கூறியதாவது:

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் அடிப்படையில் உடனடியாக விற்பனை பத்திரங்கள் வழங்கப்பட்ட பிறகு, எஞ்சிய அந்த பகுதியிலுள்ளவர்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை அரசு வழங்கும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து கே.எஸ்.இரவிச்சந்திரன் துணை கேள்வி ஒன்றை எழுப்பி கூறியதாவது:

எழும்பூர் 38வது வார்டு நேவல் மருத்துவமனை சாலையில் 50 வீடுகள், 61வது வார்டு பூபதி நகரில் 63 வீடுகள், ரங்காச்சாரி தெருவில் 60 வீடுகள், 77வது வார்டு டிமளஸ் ரோடு குமாரசாமி ராஜபுரத்தில் 63 வீடுகள், 77வது வார்டில் 338 வீடுகள், 107வது வார்டு எம்.எஸ்.நகரில் 65 வீடுகள், அதே போல் எழும்பூர் தொகுதியில் சிறு, சிறு பகுதிகளில் ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு பட்டாக்கள் கிடைக்கவில்லை. அந்த பகுதி மக்களும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களுக்கும் வீட்டுமனை பட்டாக்களை வழங்கவேண்டும். இவ்வாறு கே.எஸ்.இரவிச்சந்திரன் கூறினார். இதற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலளித்து பேசுகையில், ‘வரன்முறைக்கு உட்பட்டு வீட்டுமனை பட்டாக்களை அரசு வழங்கும்’ என்றார்.

Leave a comment